ஜெய்பீம்
இன்றைக்கு ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்து முடித்தாயிற்று. இன்றுவரை தமிழகச் சூழலில் அடக்கு முறைக்கு உட்பட்டு வரும் இருளர் பழங்குடி மக்களின் நீதிக்கான போராட்டத்தின் ஒரு துகள் திரையில் வந்திருக்கிறது. "நீதி என்பது அரசின் வன்முறை" என எங்கோ வாசித்த ஞாபகம் தொழில், தொழிலுக்கான இடப்பெயர்வு, மக்கள் மத்தியில் பழங்குடி மக்கள் பற்றிய பார்வை என நகரத் தொடங்கும் திரைக்கதை நீதி கோரல், வழக்குகளில் கட்டிப் போட தொடங்குகிறது. ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் தத்ரூபமாய் செதுக்கி இருக்கிறார் .இருளர் தமிழக பழங்குடியினர்கள் ஒரு இனக்குழுமம்.
Diffloth geravad என்கின்ற அறிஞர் "இருளர் மொழி "எனும் நூலில் "இருளர் என்ற சொல் பல்வேறு சமூகக் கூறுகளை குறிக்கும் சொல்லாக ,கேரளம் ,மைசூர் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது .ஆனைமலை பகுதியில் அட்டப்பாடியில் வாழும் இருளர் வட்ட இருளர் என அழைக்கப்படுகின்றனர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைநாடு அல்லது மேலைத்தேச இருளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்". என்கிறார் படம் முழுதும் இருளர் சமுதாய மக்கள் அரசு இயந்திரத்தால் ஒடுக்கப்படும் விதம் தேர்தல் ஜனநாயகம் அவர்கள் அங்கீகாரத்தை எந்தளவு தூரம் தடுக்கிறது என்பதையும் காட்டிவிடுகிறது. எல்லாச் சமூகங்களாலும் விளிம்பு நிலையில் வைத்து ஒடுக்கப்படும் இருளர்களின் நிலமற்ற வாழ்வு, எழுத்தறிவின்மை எதேச்சதிகார அரசு இயந்திரத்தை கேள்விக்குள்ளாக்க முடியாது இருப்பதை காட்டுகிறது
இருளர் இன குழும வாழ்வியல் பற்றிய சில கட்டுரைகளில் அவர்களின் உணவுப் பழக்கங்கள் பேசப்படுகின்றன .அவை சார்ந்த சில முரண்கள் திரையில் இருக்கத்தான் செய்கிறது .தமிழகச் சூழலில் சாதியத்தின் பெயரில் குற்றம் சாட்டும் படலங்களும் இனக்குழு அடையாளத்தால் குற்றவாளிகள் ஆக்கப்படும் துயரமும் திரையில் தத்ரூபமாய் விரிகிறது. பழங்குடி சமூகத்தில் காணப்படும் மருத்துவ முறைகளும் திரையில் ஆவணமாய் வந்து விழுந்து விடுகிறது .சட்டம், நீதி, நிலம் என ஒருபுறம் முயற்சிக்கான வழிகள் படம் முழுதும் பேசப்பட்டாலும் அந்தச் சிறுமியின் பத்திரிகை வாசிப்பும் நிமிர்வும் சமுதாய மாற்றத்தின் ஒளிக்கீற்று என படிமமாய் காட்டபடுகிறது.
ஜெய்பீம் பார்த்துக் கொண்டிருக்கின்ற போது பக்தவத்சல பாரதி எழுதிய தமிழகப் பழங்குடிகள் எனும் நூலும் பெரியாழ்வார் எழுதிய இருளர் எனும் கட்டுரையும் சோளகர் தொட்டி நாவலும் என் சரவணன் எழுதிய வேடுவர் ஆய்வின் வேர் எனும் கட்டுரையும் யுவிதங்க ராஜா எழுதிய கிழக்கு கரையோர வேடர்கள் இனக்குழும அடையாளத்தால் பாதிக்கப் படுதல் பற்றிய
எடுத்துரைப்பு எனும் கட்டுரையும் நினைவுக்கு வந்தது ஜெய் பீம் இன் காட்சி ஒன்றிலே சந்தன கடத்தல் வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கை எனும் பெயரில் பழங்குடி மக்கள் மீது நடத்தப்படுகின்ற வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனும் போராட்டம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் .சோளகர் பழங்குடி மக்கள் மீது அரசு இயந்திரம் நடத்தும் வன்முறைகளை பதிவு செய்யும் நாவல் .நாவலில் வந்து போகும் ஒவ்வொரு பாத்திரங்களும் ஏதோ எம்தேசத்தவர்கள் எனும் உணர்வைத் தரும். என் சரவணன், யுவி தங்கராசா எழுதி இருக்கின்ற கட்டுரைகள் தமிழ் வேடர்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது .பொதுவாக இலங்கையில் வேடர்கள் என்றவுடன் மகியங்கனை தான் ஞாபகத்திற்கு வரும் ஆனால் தமிழ் பேசும் வேடர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் வாழ்வதாகவும் இவர்களில் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டவர் என சொலிக்மன் எனும் மேலை நாட்டவரை இரு கட்டுரை ஆசிரியர்களும் குறிப்பிடுகிறார்கள் இவ் வேடர்கள் தம் தனித்துவங்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதை என் சரவணன் \"ஒருசாரார் தமிழ் மக்களுடன் கலந்து தமிழ் அடையாளத்தின் உள் இழுக்கப்பட்ட போதும் இன்னொரு சாரார் தமது சுய அடையாளங்களுடன் வாழவைக்கும் செயற்திட்டம் தமிழ் அரசியல் சக்திகளுடன் இருப்பதாக தெரியவில்லை \"என்கிறார் .யுவி தங்கராசாவின் கட்டுரை கிழக்கு கரையோர வேடர்கள் அவர்களின் காடுகளில் இருந்து அந்நியப்படுத்த படல் ,அவர்களின் பொருளாதார நிலை மாற்றமடைய தொடங்குதல், அதிகார வர்க்கத்திற்கும் அவர்களுக்கும் இடையிலான போராட்டம் ,அவர்களின் அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்தலில் பங்களிப்பு செய்பவை எனப் பலதரப்பட்ட விடயங்களை பேசுகிறது. சமூக நீதிக்கான குரல்கள் எப்போதும் எல்லா தேசங்களிலும் தேவைப்பட்டு கொண்டுதான் இருக்கும் சமூகநீதி கோருதல் வாக்கிற்காய் அரசியலாக்கப்படும் போது அது மீட்சிக்கான வழியாய் அமையுமா? என்பது என்பது கேள்விக்குறியே தமிழகத்தில் இருளர்கள் இனக்குழும அடையாளத்தால் அடக்கப்படுகின்றனர். இன்னல்களும் அவர்களின் நீதி கோரிய பயணமும் அதன் வெற்றியும் அவர்களை திரையில் காட்சிப்படுத்தி இருக்கிறது.
ஜெய்பீம் நீதிக்கான அரச வன்முறைக்கெதிரான வெற்றியாக ஒருபுறமாகவும் இருளர் இனக்குழுமத்தை பலர் அறியவைத்த படமாகவும் பாராட்டலாம்
சாரங்கன்
கருத்துகள்
கருத்துரையிடுக