ஆறுமுகநாவலர்

 அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் ஆறுமுகநாவலர் தொடர்பான சில வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை அவதானித்து இருக்கின்றோம்.சைவசமய பாடத்திட்டங்கள் மூலம் பெரும்பாலானவர்களுக்கு அறியப்பட்ட ஒருவராக ஆறுமுகநாவலர் விளங்குகிறார்.இவர் பற்றிய 5ம் குரவர் ,பதிப்பாசிரியர் போன்ற வழமையான தகவல்களை தவிர வேறு சிலவற்றை தேட மேற்படி சமூகவலைத்தள பதிவுகள் ஊக்கமளித்தன.அந்த தேடலில் கிடைத்தவற்றை வைத்தே இந்தக்கட்டுரை எழுதப்படுகின்றது.

டிசம்பர் மாத முன் முன்னரைப்பகுதியில் ஆறுமுகநாவலரின் குருபூசை,நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டது.அந்த மாதத்தில் வெளிவரும் பத்திரிகையில் இக்கட்டுரை வெளிவருவது நாவலரை நினைவுகூற வழிவகுக்கும் என நம்புகிறேன்.நாவலரின் உடைய வரலாற்றை தேடிப்பார்க்கும்போது இராமலிங்க வள்ளலாருடன் ஏற்பட்ட கருத்தியல் முரண் முதற்கொண்டு அவர் ஓவியம்/புகைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் வெளிவந்துள்ளது.

ஆரூரனில்லை புகலியர் கோனில்லை அப்பனில்லை சீருரு மாணிக்கவாசகனில்லை திசையளந்த பேருரு ஆறுமுகநாவலனில்லை பின்னிங்குயார் நீரூரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே.(உடுப்பிட்டி சிவசம்புப்புலவர்)

நாவலர் நல்லூரிலே 1822ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவதரித்தார்.மரபுவழி கல்வியில் தடம் போடப்பட்டிருந்த குடும்பத்தில் பிறந்த நாவலர் மரபுவழிக்கல்வியையும் ஆங்கிலக்கல்வியையும் கற்றுக்கொண்டார்.ஆறுமுகநாவலரைப் பற்றி ராஜ்கௌதமன் குறிப்பிடும் போது

"நாவலர் என்று பின்னால் அழைக்கப்பட்ட ஆறுமுகம் பிள்ளை(1822-1879)மரபான தமிழ்க்கல்வியையும் ஆங்கிலக்கல்வியையும் கற்றவர்.இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கும் புலமை வாய்ந்தவர்.சைவ சித்தாந்த சாத்திரங்களை தாமே கற்றுணர்ந்தாராம்.கடைசி வரை இவர் எந்த அரச உத்தியோகத்திலும் இருந்ததில்லை.முழுத்துற்வி,சமஸ்கிருதத்திலும் இவருக்கு பயிற்சி உண்டு.தன்னை இருபத்திரெண்டாவது வயதில் சிவன் ஆட்கொண்டதாக எழுதியுள்ளார்.வாழ்நாள் முழுதும் அவர் மேற்கொண்ட பணிகள் சைவ சமயத்தை பழைய பெருமைக்கு மீட்டெடுத்தல்,சைவ சமயக்கல்வியைப் பரப்புதல்,இதற்கு தடையாக அவர் கருதிய கிறிஸ்தவமதத்தையும் மிஷனரிகளின் முயற்சிகளை எதிர்த்தல்,சைவ நூல்களை பதிப்பித்தல்,பத்திரிகை நடத்தல்,சைவ வித்தியாசாலைகளை நாடெங்கும் உருவாக்குதல் முதலியனவாகும்"என்கிறார்.

இவ்வாறு பன்முகத்தளங்களில் செயற்பட்ட ஒருவராக விளங்கினார்.பிரசங்கப்பணி அவரை முன்னிலைப்படுத்தியது எனலாம்.தமிழ் புலமையாளர்கள் தமிழ் நாவன்மையின் தொடக்கப்புள்ளியாக நாவலரைக் கொண்டாடுகிறார்கள்.நாவலரின் உடைய சமய பிரசங்கம் ஏற்படுத்திய வீரியத்தை வெஸ்லியன் மெதடிஸ்த போதகரான வண.எட்வேர்ட் ஜூலிற் றொபின்ஸன் எழுதிய Hindu pastors என்ற நினைவுக் குறிப்பின் மூலம் அறியலாம்.

"சைவ போதகர்களும் பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்களும் மெதடிஸ்த மாதிரிகையில் ஒரு வட்டத்தை உருவாக்கிப் பணியாற்றத் தொடங்கினார்.தங்கள் புனித நூல்களில் உள்ள பகுதிகளை வாசிப்பது,ஓதுவது தொடர்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதிலால் சூழப்பட்ட வண்ணார்பண்ணை சிவன் கோயிலின் புனித வளாகத்தினுள் ஒரு பெரிய பந்தலில் ஒரு சொற்பொழிவு அல்லது பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.கிரமமாக இல்லாவிடினும் முக்கிய அயற் கிராமங்களாகிய சுன்னாகம்,மானிப்பாய் போன்ற இடங்களில் சந்திப்புக்கள் நடந்தன.1847டிசம்பர் 31ம் திகதி முதற் பிரசங்கம் தொடங்குமுன் ஆலயக் குருக்கள் தேங்காய் உடைத்துப் பிள்ளையாரை வணங்கி அருள் வேண்டினார்.கூட்ட முடிவில் அவர் எழுந்து சங்கத்துக்கு நல்ல சகுனம் ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார்.முதலாவதாக தேங்காய் இரு சம பகுதிகளாக பிளந்துள்ளது.இரண்டாவதாக சொற்பொழிவின் தொடக்கத்திலே கோயிலினுள்ளே இருந்து மணி கேட்டது.முக்கிய பேச்சாளர்கள் இருவரும் எங்கள் யாழ்ப்பாண பாடசாலையில் பகல் நேர மாணவர்களாக இருந்தவர்கள்.முதலாமவர் அவ்வியக்கத்திற்குத் தலைமை தாங்கிய மேதாவி ஆறுமுகவர் ஆவர்.மற்றவர் அவர் நண்பர் கார்த்திகேசையர்.முன்னையவர் வேளாள சாதியைச் சேர்ந்த கவர்ச்சிகரமான விவேகமுள்ள படிப்பாளி.அடக்கமும் சிந்தனை வயப்படும் இயல்புமுள்ளவர்.அப்பழுக்கற்ற வாழ்வு வாழ்ந்தவர்.கிறிஸ்தவ ஆகமங்களில் அவருக்குள்ள பரிச்சயம் இந்து சாஸ்திரங்களில் அவருக்கிருந்த ஆட்சிக்குக் குறைந்ததல்ல.அவர் நெடுங்காலமாக,நாள்தோறும்,ஆற்றல் சார்ந்த உழைப்பாளியான பேர்சிவலின் சகாவாகவும்,உதவியாளராகவும் இருந்து ஆய்வேடுகளையும்,தோத்திர நூல்களையும் செப்பனிட்டும்,பிரார்த்தனை நூலையும்,பரிசுத்த விவிலியத்தையும் மொழிபெயர்த்தும் உதவினார்.கார்த்திகேச ஐயர் உருண்டு திரண்ட எண்ணெய் வழுக்கும் பிராமணர்.தன் சகாவின் உடல்வாகோ,தீவிரமோ இல்லாவிடினும் இந்து மத இயலில் அவரளவு பாண்டித்தியமும்,அவரளவு தேசபக்தியும் படைத்த அவரால் தனித்து இம்முயற்சியில் ஈடுபட்டிருக்க முடியாது.இதை எழுதியவரின் (றொபின்சனின்)மரியாதைக்குரிய விசுவாசி அவர்.ஒரு முறை அவரைக் கேலி செய்த பொழுது ஐயத்துக்கிடமில்லாத வரலாறு என்று தான் மக்களுக்குச் சொல்வதை,தானே நம்பவில்லை என்று தயங்காமல் ஒத்துக்கொண்டார்.நாவலர் ஆற்றிய உரைகளின் அறிக்கைகளிற்கு $20 வழங்குவதாக உதயதாரகை morning star பகிரங்கமாக அறிவித்தது"என்று றொபின்ஸன் குறிப்பிடுகிறார்.


நாவலர் வாழ்ந்த புகைப்படக்கலை அறிமுகமாகி இருந்தபோதும் அவரின் உடைய புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவோ,அவரின் திருவுருவம் வரையப்பட்டதாகவோ சான்றுகள் இல்லை.அவரின் உடைய மாணவர் பரம்பரையினர் ஞாபகங்களில் இருந்து பெறப்பட்டதே.

நாவலரின் தோற்றம் பற்றி அவரின் மருகரும் சரித்திர ஆசிரியருமான த.கைலாசப்பிள்ளை தரும் செய்தி முக்கியமானது.


"பிற்காலத்தில் இவருடைய உருவத்தில் தலையும் நெற்றியும் மிகப்பெரியன.காதுகள் சிறியன.கைகளும் ,கால்களும் மெல்லியன.உடல்பெருத்தது;முகரோமங்கள் மிகப்பலமுடையன........."

என நீள்கிறது.நாவலரை சிறுவயதில் அவரின் உறவினர்கள் "பரணாத்தலையர்" என அழைத்தார்கள் என்ற குறிப்பை பதிவு செய்கிறார் சிவபாதசுந்தரம்

நாவலரைப்போன்ற தோற்றமுடைய மாதகல் ஏரம்பையரை வைத்தே நாவலரின் திருவுருவம் வரையப்பட்டதாக நாவலர் மாணக்கர் பரம்பரையிடம் ஓர் கருத்து உண்டு.


நாவலரின் உடைய சிலை கொண்டுவரப்பட்ட போது ஈழநாடு பத்திரிகை வெளியிட்ட ஓர் செய்தி அவர் மீது மக்கள் கொண்டிருந்த அன்பைக்காட்டி நிற்கிறது.

"மக்கள் வெண்கலத்தில் வார்க்கப்பட்ட திருவுருவமெனக்கருதாது நாவலர் பெருமானாகவே கருதி மலர்மாலைபள்,பட்டுபீதாம்பரங்கள் ,காணிக்கைகள் அளித்து அஞ்சலி செலுத்தினர்(04.07.1969)


ஆறுமுகநாவலர் தன் ஆளுமைகளால் தனித்த அடையாளம் பெறத் தொடங்கினார்.சமயம்,இலக்கியம்,அரசியல் பல தளங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முயன்றார்.தெ.பொ.மீனாட்சிசுந்தரம் கொச்சை தமிழையும்,செந்தமிழ் என அறியப்பட்ட உரைநடையும் சீர்ப்படுத்தியவர் ஆறுமுகநாவலர் என்கிறார்.

தமிழின் எழுத்து மற்றும் பேச்சு வடிவங்களை இணைத்து சூழலுக்கேற்ற புதியவகை மொழியை உருவாக்கினார்.ஓதுவார்களை அழைத்துவந்து திருமுறைகளை ஓத வழி ஏற்படுத்தினார்.

நாவலர் தன்னை ஐந்தாம் குரவர் என அழைப்பதை எதிர்த்ததாக சான்றுகள் உள்ளன.வை.திருஞான சம்பந்தப்பிள்ளை (1949-1981)நாவலரை ஐந்தாம் குரவர் என முதலில் அழைத்ததாக குறிப்புகள் உள.நாவலரால் அது எதிர்க்கப்பட்டாலும் அது பிரபல்யமாகி நிலைநிறுத்தப்பட்ட ஒரு பிரயோகமாக வேரூன்றி உள்ளது.யாழ்ப்பாண வெஸ்லியன்கள் உருவாக்கிய தலைசிறந்த மெதடிஸ்தர் என்ற புகழை ஈட்டினார் என்கிறார் சிவத்தம்பி.

ஒரு புரட்சியை ஈழத்தில் வித்திட்டது நாவலரே.பதிப்பு உரையாசிரியர் பணிகளாலும் நாவலர் சகாப்தம் இன்று வரை ஆராயப்படுகிறது.


துலா மின்னிதழில் வெளிவந்தது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு