விண்ணதிர்பரணி

 "என்னையும் இணைத்துக் கொண்ட ஒட்டுமொத்த சமூகத்தின் வலி தீர்ப்பாக எனது கவிதைகளை நான் எழுதுகிறேன் இங்கே என்னுடைய குரலை சமூகத்தின் குரலாகவும் கொள்ளப்படுகிறது" 

புதுவை இரத்தினதுரை


டிலோயினி மோசஸின் கவிதைத் தொகுப்பாக விண்ணதிர் பரணி அண்மையில் வெளிவந்திருக்கின்றது .கவிஞர் தன் சூழல், வாழ்வியல் என்பவற்றை பெரும்பாலும் தன்நிலை கூற்று நிலையில் கவிதைளாகப் படைத்திருக்கிறார்.ஈழத்தின் உடைய இலக்கியச்செல்நெறி  ஒரு காலத்தின் பின் போர் அவலங்களை பாடுவதில் மையம் கொள்கிறது .டிலோயினியின் பெரும்பாலான கவிதைகளும் அதே தளத்தில்தான் எழுதப்பட்டிருக்கின்றது .போரின் பின்னரான சமூகம் இன்னொரு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. அரசியல் கைதிகளின் விடுதலை, நில அபகரிப்பு ,நல்லிணக்க முயற்சிகள் தோல்வியுறல் போன்ற சமூகச் சிக்கல்களும் கவிதை கருவாக விரிந்திருக்கிறது .ஆத்மாவின் ஆதங்கம் என்ற கவிதையில்

             "சுடலையில் தான்வேக

            சிறைவைக்க அவர் போக

           செல்வங்கள் இரண்டும்     

          கதிகலங்கி நிக்குங்கள்

          கடவுளே நான் கத்துறது

           காது கேளாதோ"

என்ற வரிகள் ஒரு சமூகத்தையும் இறையியலையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் தன்மையோடு படைக்கப்பட்டுள்ளது. போரின் துயர் தலைமுறை கடந்தும் தொடர்வதை இவ்வரிகள் உணர்த்துகிறது.

விண்ணதிர்பரணியின் ஓரிரண்டு கவிதைகள் சாதிய மத புறமுதுக்கல்  குரல்களை ஆணித்தரமாய் பதிவுசெய்கிறது.

" ஈசனின் பெயரால்

 நீறாகிய நேசங்களுடன்

இயேசுவின் பெயரால்

 கழுவேறிய காதல்களும்

கரை படிந்த மதங்களின் 

கதை பேசும்

பாவம்

எங்கள் காதலும்

மதம் நாறும் தெருக்களில்

அனாதையாய் அலைகிறது"

      என்ற வரிகளால் மதரீதியாக பிளவுற்ற சமூகத்தின் துன்பநிலை பேசப்பட்டிருக்கிறது .அதே கவிதையில்

"நம் குழந்தைகளுக்கு

கற்றுக் கொடுப்போம்

மனித மதத்தை

அவர்களின் இதயம்

அன்பென்ற கடவுளை

ஆராதனை செய்யட்டும்"

என்று அடுத்த தலைமுறைக்கு மதம் அற்ற சமூகத்தை விதைக்க வேண்டும் என்கின்ற கவிஞரின் நம்பிக்கை வெளிப்பட்டு நிற்கிறது.

சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்றன சாதிய தீண்டாமை அருவருக்கத்தக்க பானம் என கவிதையில் காட்டுகிறார்.

 கவிஞரின் அக உணர்வு குரல்களும் ஆங்காங்கே வெளிப்பட்டிருக்கிறது. அப்பொருட்களை பாட  \"மேகா\" என்ற குறியீட்டுப் பெயரினை கவிஞர் பெரும்பாலும் பயன்படுத்துகிறார் கவிஞர் காதலில்  இயற்கையை துணைக்கழைத்து மேகா யார் என்ற வினாவை வாசகர்களிடையே ஏற்படுத்தி விடுகிறார்.

மேகா

உணர்ச்சி 

புணர்ச்சி

யாவும் கடந்து 

உயிருருகி 

அன்பு செய்வோம்

வானளந்து

விண்தாண்டி

கடல் கடந்து

வரையேறி 

காதலில் 

திளைப்போம்

என எதிர்கால கனவை வெளிப்படுத்தி நிற்கிறார்.

கவிஞர் வரிந்துகொண்டுள்ள தமிழ்த்தேசியநிலைப்பாடு சில கவிதைகளில் வெளிப்படையாக தெரிகிறது.உயிர்ஒளி,இரட்சிப்பு,

நினைதல் போன்ற கவிதைகள் இதற்குச்சான்றாகும்.

விண்ணதிர்பரணியில் \"கசாப்புமன்றங்கள்\" என்ற கவிதை குறிப்பிட்டுச்சொல்லக்கூடியதொன்றாகும்.உருவகமாய் சொல்லும் பாங்கும் இனமொன்றின் நீளும் அவலமும் உணர்வுபூர்வமாய் வெளிப்பட்டுநிற்கிறது.

இனநல்லிணக்கத்திற்கான சமிஞ்சைகள் ஓர்புறத்தில் இருந்து வெளிப்பட்டாலும் மறுபுறத்தில் அது நிராகரிக்கப்படும் அவலத்தை தேரவாதம் எனும் தலைப்பில் அமைந்த கவிதையில்

      "எனக்கு பிடித்த புத்தரை 

     என் பிள்ளைக்கும்

     பேரனுக்கும்

     கொடுக்க நினைத்தால்

     எங்கள் நிலங்களை 

     ஆக்கிரமித்து

     சூலங்களை பிடுங்கிய

     புத்தரின் வாயில் 

     இரத்தின் கறைகள்"

                       என   காட்டுகிறார். போரின் பின்னரான நில அபகரிப்பு துயரம் கவிதையின் மையமாய் அமைகிறது.

இளவரசி,முதல்க்காதலன் ஆகிய கவிதைகள் தந்தை மகள் உறவு நிலைகள் பற்றி பேசுகின்றது.கவிஞரின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன.

    போர் முடிவுற்று ஓர் தசாப்தம் கடந்துவிட்டபோதும் படைப்புக்களில் அதன் தாக்கம் தொடர்ந்து வருகிறது. அதற்கு விண்ணதிர்பரணியும் ஓர் சான்று.போரின் பின்னரான நிலை ,எதிர்பார்ப்பு ,நிராகரிப்பு என்பனவே விண்ணதிர்பரணியின் பெரும்பாலான கவிதைகளின் கருவாய் அமைகிறது.காதலையும் பிறவாழ்வியலையும் பேசும் கவிதைகள் மிகச்சொற்பமே .யதார்த்தவாழ்வின் ஓர் தளத்தை விண்ணதிர்பரணி வெளிப்படுத்தி நிற்கிறது.மொழி கையாளுகையில் வெளிப்பட்டு நிற்கின்ற வேதாகமச்சொற்கள் தனிச்சுவை கவிதைக்கு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு