வெட்டுக்கிளிகளும் விவசாய அழிவுகளும்
உலக ஊடகங்களின் பெரும்பரப்பை ஆக்கிரமித்த கொரோனா வைரசின் வீரியம் சற்று குறைந்து வருவது ஆறுதலளிக்கிறது. ஆனாலும் இந்தியாவை நோக்கி பெரும் வெட்டுக்கிளி கூட்டம் படையெடுக்கிறது என்ற செய்தி பலரை நடுநடுங்க வைக்கிறது. ஏலவே வீட்டு முடக்கம் காரணமாக ஏராளமான நாடுகள் பொருளாதார வீழ்ச்சி நிலையை கண்டுள்ளது. தொடர்ந்து பஞ்சங்கள் ஏற்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளதுள்ளனர். இந்த வெட்டுக்கிளிகளினால் ஏற்படப்போகும் அழிவு ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்தப்போகின்றது. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பினால் உற்பத்திகள் அழிக்கப்பட போகின்றது. அண்மைக் காலங்களில் சோமாலியா, எதியோப்பியாவில் தான் வெட்டுக்கிளிகளால் பாரிய அளவு விவசாய நிலங்கள் சேதமாக்கமப்பட்டுள்ளது. பருவப்பெயர்ச்சி போல காலத்திற்கு காலம் இடம்பெயரும் இவற்றைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் உற்பத்தியாளர்கள் தடுமாறி வருகின்றனர்.
தமிழில் தோன்றிய கரிசல் காட்டு நாவல்களிலும் இந்த வெட்டுக்கிளிகளின் உடைய படையெடுப்பு அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் விரிவாகப் பேசப்பட்டுள்ள தன்மையை காணலாம். கோபல்ல கிராமத்து மக்கள் நாவலை உதாரணமாக குறிப்பிடலாம். தமிழில் வெளிவந்த காப்பான் திரைப்படமும் இந்த விடயத்தை கருவாய் கொண்டது. வளமான விவசாய நிலங்களை கனிய வளங்களிற்காக கைப்பற்ற நினைக்கும் கும்பல் வெட்டுக்கிளிகளை வளர்த்து அவற்றை விவசாய நிலங்களில் விட்டு அதன் மூலம் பயிரழிப்புக்களை ஏற்படுத்துகின்றனர் நட்டமடைந்த விவசாயிகள். மனமுடைந்து தங்கள் நிலங்களை வழங்க வருவார்கள் என்பதே அக்கும்பலின் நோக்கமென திரைக்கதையை அமைத்து நகர்த்திச் செல்கிறார் இயக்குநர்.நிற்க.
இந்த வெட்டுக்கிளிகள் அவற்றால் அழிவுகள் ஏற்படும் என்பது பற்றி சில சமய நூல்கள் பேசியிருக்கின்றன. பைபிளின் யாத்திராகமம் வெட்டுக்கிளிகள் தொடர்பில் பின்வரும் விடயங்களை குறிப்பிட்டுள்ளது.
1.நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன்.(யாத்திராகமம்10:4)
2.உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன் பிதாக்களும் உன் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றிய நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.(யாத்திராகமம்10:6)
3.தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல் மழைக்குத்தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளை யெல்லாம் தின்றுபோடும்.(யாத்திராகமம் 10:5)
இஸ்லாமியர்களின் புனித நூலாக குர்ஆனிலும் வெட்டுக்கிளிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
1.ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.(சூறா அல் அஃராப்-133)
2.(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.(சூறா அல்கமர்-7)
இவ்வாறான செய்திகள் புனித நூல்களில் காணப்படுகின்றது.இந்த வெட்டுக்கிளிகளால் ஏற்படுத்தப்படும் அழிவுகளை மத நிலைகளில் நின்று நோக்க முற்படுவதையும் காணக்கூடியதாய் உள்ளது.
ஈழத்தைப் பொறுத்த வரையில் வெட்டுக்கிளிகள் பற்றி சில நம்பிக்கைகள் காணப்படுகிறது.பச்சை வெட்டுக்கிளிகளின் வரவு செல்வத்தின் வருகைக்கான அறிகுறி எனவும், பிதிர்களின் கடமைகளை சரிவர நிறைவேற்றாவிட்டால் ஞாபகமூட்ட அவை வருவதாகவும் சிலர் கருதுவதுண்டு.
இந்த வெட்டுக்கிளிகள் மெக்சிக்கோ,சீனா போன்ற நாடுகளில் உணவாக உட்கொள்ளப்படுகின்றது.வீதியோர தள்ளுவண்டில்களில் இவை பொரிக்கப்பட்டு விற்கப்படுகின்ற புகைப்படங்களை வலைத்தளங்களில் காணமுடிகிறது.பூச்சி இனத்தை சேர்ந்த வெட்டுக்கிளிகள் நவீன விவசாய உலகத்திலும் பெரும் அச்சுறுத்தலுக்கு உரிய ஒன்றாக மாறி வருகின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக